தினம் ஒரு கதை - 33
மந்திர வித்தை தெரிந்த பெரியவர் ஒருவர், ஊரை விட்டு விலகி காட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடில் அமைத்து மனைவியுடன் தங்கினார்.
காலை எழுந்து தோட்ட வேலை செய்து கொண்டிருந்தபோது வழிப்போக்கன் ஒருவன் பதற்றமாக எதையோ தேடிக் கொண்டு வந்தான்.
பெரியவர் அவனிடம், ‘‘என்ன தேடுகிறாய்?’’ என்று கேட்டார். ‘‘காட்டைக் கடந்து வேறு ஊருக்குப் போகிறேன். போகும் வழியில் பசித்ததே என்று அவித்த கடலையை சாப்பிட்டுக் கொண்டு வந்தேன். எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று கடலை ஒன்றைக் கொத்திக்கொண்டு போய்விட்டது. அந்தக் கடலையை மீட்க பறவையைத் தேடுகிறேன்.’’
‘‘ஏனப்பா, ஒரு கடலைதானே. அதை பறவை சாப்பிட்டால் என்ன குறைந்து விடப் போகிறது?’’
‘‘அதை எப்படி விட முடியும் ஐயா? என் பொருள் எதையும் யாருக்கும் கொடுக்க மாட்டேன்.’’
‘‘சரி, உனக்கு உன் பொருள்தானே வேண்டும்.’’
‘‘ஆமாம் ஐயா!’’
பெரியவர் தன் மந்திர சக்தியை வலது சுண்டு விரலுக்குக் கொண்டு வந்து சிறு கல்லைத் தொட்டார். அது தங்கமானது.
‘‘இதோ... இதை எடுத்துக் கொள்!’’
‘‘போதாது ஐயா, இன்னும் தங்கம் வேண்டும்.’’
இப்போது பெரியவர் பெரிய பாறையை வலது சுண்டு விரலால் தொட்டு தங்கமாக்கினார்.
‘‘இதை எடுத்துக் கொள்.’’
‘‘போதாது ஐயா!’’
‘‘இன்னும் உனக்கு என்னதான் வேண்டும்?’’
‘‘எதையும் தங்கமாக்கும் உங்கள் மந்திர சுண்டு விரலை வெட்டிக் கொடுத்து விடுங்கள் ஐயா!’’
பேராசைக்காரர்களுக்கு எவ்வளவு பொருள் கொடுத்தாலும் போதாது என்பதை உணர்ந்து கொண்ட பெரியவர், அந்த வழிப்போக்கனை விரட்டிவிட்டார்.