தினம் ஒரு கதை - 19

இத்தாலியின் புகழ்பெற்ற சிற்பியான பெர்டெல் தோர்வால்ட்சென் (Bertel Thorvaldsen) மரவேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். எப்படியாவது பெரிய சிற்பியாக வேண்டும் என்று தீர்மானித்தார். டென்மார்க்கிலிருந்து இத்தாலி வந்து சிற்பக்கலையைக் கற்றுக் கொண்டு அழகான சிற்பங்களை செதுக்கினார். 

மிகுந்த கவனத்தோடும் கலையழகோடும் செதுக்கப்பட்ட அவை மக்கள் மத்தியில் புகழ்பெற ஆரம்பித்தது. எல்லோரும் பாராட்டினாலும், வாங்குவதற்கு யாரும் வரவில்லை. 

தோர்வால்ட்சென் சிலரிடம் சென்று தன் சிற்பங்களை விற்க முயற்சி செய்கிறார். அவர்களும் வாங்குவதாக இல்லை. 

‘நம் சிற்பங்களை யாரும் காசு கொடுத்து வாங்க மாட்டார்கள்’ என்று நினைத்த அவர், சோர்வுடன் தன் சொந்த நாடான டென்மார்க் செல்ல முடிவு செய்தார். 

தான் செதுக்கியிருந்த சிற்பங்களை அப்படியே போட்டுவிட்டு கிளம்பினார்.

ஆனால், அவரது நுழைவுச்சீட்டில் ஏதோ பிரச்னை என்று அதிகாரிகள் அவர் கிளம்ப அனுமதிக்கவில்லை. பிரச்னையை சரிசெய்வதற்காக பயணத்தை ஒருநாள் தள்ளிப் போடும்படி கேட்டார்கள்.

‘இன்னும் ஒருநாள் கூடுதலாக இத்தாலியில் தங்க வேண்டியதிருக்கிறதே’ என்று எரிச்சலுடன் அவர் திரும்பினார். 

கொஞ்ச நேரத்தில் அங்கு வந்த பணக்காரர் ஒருவர், தோர்வால்ட்சென் செதுக்கிய சிலைகளில் ஒன்றை 1,600 டாலர்களுக்கு வாங்கிக் கொண்டார். 

தோர்வால்ட்செனுக்கு நம்பிக்கை வந்தது. நாடு திரும்பும் முடிவைக் கைவிட்டு, இத்தாலியிலேயே இருந்து பல சிற்பங்களை செதுக்கி உலகப் புகழும் பணமும் பெற்றார்.

‘வாழ்க்கையில் திறமை மட்டும் இருந்தால் போதாது, அந்தத் திறமை மலர்ந்து மணம் வீசும் வரை காத்திருக்கும் பொறுமையும் வேண்டும்’ என்ற கருத்தை தோர்வால்ட்சென் உணர்த்துகிறார்.

crossmenu