தினம் ஒரு கதை - 12

ஒரு பெரிய நீர்நிலை இருந்தது. அதில் நிறைய வாத்துகள் இருந்தன.

அளவுக்கு மீறி வாத்துகள் பெருகியதால் மீன்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. வாத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்காவிட்டால் மீன்கள் அழிந்துவிடும் ஆபத்து இருந்தது.

நீரில் அந்த வாத்துகளை வேட்டையாட சிரமமாக இருந்தது. ஊரிலுள்ள வேட்டைக்காரர் ஒருவர், இதற்குத் தீர்வு கண்டுபிடிக்க எண்ணினார்.

தன் நான்கு நாய்களுக்கும் நீரில் ஓடும் பயிற்சியைக் கொடுத்தார். உலகில் யாராலுமே செய்ய முடியாத செயல் நீரில் நடப்பதும் ஓடுவதும் ஆகும்.

ஆனால், கடும் பயிற்சிக்குப் பிறகு அதையும் சாதித்தார் வேட்டைக்காரர்.

பிறகு தன் நண்பர்களை அழைத்து விருந்து வைத்தார். அவர்கள் விருந்து உண்ணும்போதே, தன் நான்கு நாய்களையும் நீருக்குள் விட்டார். அவை நீரில் ஓடி ஓடி வாத்துக்களை வேட்டையாடி வந்து கரையில் போட்டன.

‘‘என் நாய்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?’’ என்று நண்பர்களிடம் வேட்டைக்காரர் ஆவலுடன் கேட்கிறார்.

அதற்கு அந்த நண்பர்கள், ‘‘பார்த்தோம்... பார்த்தோம்... உன் நாய்களுக்கு நீச்சலே அடிக்கத் தெரியவில்லை. அதனால்தானே நீரில் ஓடுகின்றன’’ என்றார்கள்.

‘எவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறோம். இவ்வளவு அலட்சியமாக சொல்கிறார்களே’ என்று வேட்டைக்காரர் வேதனையுற்றார்.

பின்பு அந்த நாய்களை நாட்டு மன்னனிடம் காட்டினார். மன்னன் வியந்து பார்த்து, வேட்டைக்காரரை வெகுவாகப் பாராட்டி பரிசளித்தான். ‘‘இன்னும் பல நாய்களுக்கு பயிற்சி கொடுங்கள்’’ என்று வேண்டிக் கொண்டான். 

‘எவ்வளவுதான் நல்ல விஷயங்களைச் செய்தாலும், எதிர்மறை எண்ணமுடையவர்கள் அதை எதிர்மறையாகத்தான் சொல்வார்கள். அதை சட்டை செய்யாமல் வாழவேண்டும்’ என்ற பாடத்தை வேட்டைக்காரர் கற்றுக்கொண்டார்.

crossmenu