கவலை சுமப்பவன்!

மிகச்சிறிய அந்த நகரத்தில் மக்கள் உற்சாகமாக வாழ்ந்து வந்தனர். அங்கு யாருமே ஏழைகள் இல்லை; எல்லோருமே மாட மாளிகைகளில் வாழ்ந்தனர். பரம்பரை சொத்துகளுக்கும் தினசரி வருமானத்துக்கும் எப்போதும் குறைவில்லாத வாழ்க்கை. விதம்விதமான உணவுகளை சாப்பிட்டு, தினம் ஒரு கேளிக்கையில் ஈடுபட்டு சந்தோஷமாக இருந்தனர் எல்லோரும்!

மாற்றம் என்பதுதானே மாறாத இயற்கை நியதியாக இருக்கிறது. விடுதிகளில், பூங்காக்களில் அடிக்கடி கூடிப் பேசும்போதுதான் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கவலை இருப்பது புரிந்தது. ‘மகன் படிப்பதில்லை...’, ‘மகள் சொன்ன பேச்சை மதிப்பதில்லை...’, ‘கணவர் அளவுக்கு அதிகமாகக் குடிக்கிறார்...’, ‘மனைவி வீண் செலவு செய்கிறார்...’ & இப்படியாக இருந்தன அவர்களின் பிரச்னைகள். இந்த பிரச்னைகளால் அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் குறைந்துவருவதாக பலரும் அபிப்ராயப்பட்டனர். ‘பழைய இனிய வாழ்வு வாய்க்காதா’ என்ற ஏக்கம் எல்லோருக்குள்ளும் இருந்தது.

ஒருநாள் நகரத் தலைவர் முன்னிலையில் எல்லோரும் கூடினர். தங்கள் பிரச்னைகளைக் கொட்டினர். எல்லாவற்றையும் கேட்ட நகரத் தலைவர் ஒரு யோசனை சொன்னார். “ஒவ்வொரு குடும்பத்திலும் சின்னச் சின்னதாக நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. இதற்காக ஒவ்வொருவரும் தனித்தனியாக கவலைப்படுவதை விட, நம் எல்லோருக்குமாக சேர்த்து கவலைப்பட, நகர நிர்வாகத்தின் சார்பில் ஒரு ஆளை நியமித்து விடலாம்” என்பதே அந்த யோசனை!

எல்லோருக்கும் இதில் முழு சம்மதம். தங்கள் மனச்சுமை தீர்ந்துவிட்டதாகவே பலரும் நம்பினர்.

‘யாரை நியமிப்பது? அவருக்கு என்ன சம்பளம் கொடுப்பது?’ என்ற விவாதங்கள் அடுத்து எழுந்தன.

“கோயிலின் எதிரே பாதையோரமாக உட்கார்ந்து ஒருவன் செருப்பு தைக்கிறான்; பக்கத்து நகரத்திலிருந்து பிழைப்பு தேடி வந்திருக்கிறான். வாடிக்கையாளர்கள் அதிகம் வராததால், அவன் எப்போதும் கவலையோடு காணப்படுவான். அவனை விட சோகமாய் இந்த நகரத்தில் யாரும் இல்லை... அவனையே நமக்காகவும் சேர்த்து கவலைப்படச் சொல்லலாம். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவனுக்கு மாதம் நூறு ரூபாய் கொடுக்கலாம்” என்று ஒருவர் சொன்னார்.

உடனே அந்தத் தொழிலாளியை அழைத்து விஷயத்தைச் சொன்னார் நகரத் தலைவர். அவன் அதிர்ச்சியோடு இப்படிக் கேட்டான்... “கவலைகளை சுமப்பதற்காக இவ்வளவு பணத்தை எனக்குக் கொடுத்தால், இந்த நகரத்திலேயே அதிகம் சம்பாதிப்பவன் நானாகத்தான் இருப்பேன். அதைவிட பெரிய சந்தோஷம் தரும் விஷயம் எனக்கு உலகத்தில் வேறு என்ன இருக்கிறது! அப்படிப்பட்ட சூழலில் என்னால் எப்படி கவலைப்பட முடியும்?”

யாரும் தங்கள் வாழ்க்கைச் சுமைகளை அடுத்தவர் முதுகில் வைக்க முடியாது!                        

crossmenu