டெபிட் கார்டு - உஷார் டிப்ஸ்!
ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்று, பாதுகாப்பற்ற சூழலில் பணத்தைப் பறிகொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. ‘பாதுகாவலர்கள் இல்லாமல் ஏ.டி.எம் மையங்கள் செயல்படக் கூடாது’ என காவல் துறை அறிவுறுத்தியதால், பல வங்கிகளின் ஏ.டி.எம்கள் இரவு நேரத்தில் மூடப்படுகின்றன. இன்னொரு பக்கம், ஏ.டி.எம் பயன்பாட்டுக்கு கட்டணமும் விதிக்கின்றன வங்கிகள். ஏ.டி.எம் மையங்களை எச்சரிக்கையோடு பயன்படுத்துவது எப்படி?
* வங்கிக் கிளையோடு இணைந்துள்ள ஏ.டி.எம்மையோ, பெரிய வணிக மற்றும் அலுவலக வளாகங்களில் இருக்கும் ஏ.டி.எம்களையோ பயன்படுத்துங்கள். எப்போதும் மக்கள் நடமாட்டமும் பாதுகாப்பும் இருப்பதால், இங்கு நீங்கள் பாதுகாப்பாக உணரலாம். பெரும்பாலும் இங்கெல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் நன்றாக இயங்கும். ஒதுக்குப்புறமான, வெளிச்சம் இல்லாத இடங்களில் இருக்கும் ஏ.டி.எம்களைத் தவிர்த்து விடுங்கள்.
* அவசிய அவசரம் இருந்தால் தவிர, இரவு வெகுநேரத்துக்குப் பிறகோ, அதிகாலையிலோ ஏ.டி.எம்முக்குச் செல்லாதீர்கள். பெண்கள் துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லுங்கள்.
* ஏ.டி.எம் அட்டை வைத்திருக்கும் பர்ஸில், ரகசிய ‘பின்’ நம்பரை எழுதி வைக்காதீர்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம்கூட பின் நம்பரைச் சொல்லாதீர்கள். கார்டு தொலைந்தால் உடனே பணம் பறிபோய்விடும்.
* உங்களது பிறந்த நாள், வாகன எண் என பலருக்கும் தெரிந்த எண்களை பின் நம்பராகப் பயன்படுத்தாதீர்கள்.
* நீங்கள் ஏ.டி.எம் மெஷினில் கார்டை செருகி பின் நம்பரை அழுத்தும்போது யாராவது எட்டிப் பார்க்கக் கூடும். ஒருவேளை விஷமிகள் எங்காவது ரகசியக் கேமரா வைத்து படம் பிடிக்கக்கூடும். எனவே பின் நம்பரை அழுத்தும்போது, குனிந்து உங்கள் உடலால் கைகளை மறைத்துக் கொள்ளுங்கள்; அல்லது பர்ஸ் வைத்தும் மறைக்கலாம்.
* ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியைப் பயன்படுத்தி டெபிட் கார்டு தகவல்களை ரகசியமாகச் சேகரிக்கும் மோசடி கும்பல்கள் நடமாட்டம் இருக்கிறது. எனவே ஏ.டி.எம் மெஷினில் கார்டு நுழைக்கும் இடத்தில் பசையோ, டேப்போ ஒட்டப்பட்டிருந்தாலோ, சம்பந்தமில்லாமல் ஏதாவது வயர்கள் இணைக்கப்பட்டிருந்தாலோ, அந்த மெஷினைப் பயன்படுத்தாதீர்கள்.
* முகம் தெரியாத நபர்களின் உதவியை நாடாதீர்கள். வேறு வழியின்றி யாரையாவது உதவி கேட்டால், அன்றே உங்கள் பின் நம்பரை மாற்றிவிடுங்கள்.
* பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு ஞாபகமாக மெஷினில் இருக்கும் ‘கேன்சல்’ பட்டனை அழுத்துங்கள்.
* இயன்றவரை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்களிலேயே பணம் எடுங்கள். ஏதாவது மோசடியோ, கோளாறோ என்றால் ஒரே வங்கிக்கு அலைவதோடு மட்டும் முடிந்துவிடும். இல்லாவிட்டால் இரண்டு இடங்களுக்குப் போக நேரும்.
* உங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் மொபைல் எண்ணை ஞாபகமாக இணைத்து விடுங்கள். உங்கள் கணக்கில் பணம் போடப்பட்டாலும், எடுக்கப்பட்டாலும் உடனடியாக உங்கள் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்துவிடும். யாராவது மோசடி செய்தாலும், உடனே தெரிந்துகொண்டு உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு கார்டை முடக்கச் செய்யலாம்.
* உங்கள் வங்கிக் கிளையிலிருந்து பேசுவது போல போன் செய்வார்கள்; உங்கள் வங்கி அனுப்பியது போலவே இமெயில் அனுப்புவார்கள். எப்படிக் கேட்டாலும் உங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டின் பின் நம்பரைச் சொல்லாதீர்கள். உங்கள் வங்கிக்கு அந்த விவரம் தேவையில்லை. இது மோசடியாளர்களின் வேலை!
* கார்டு தொலைந்தால் உடனே உங்கள் வங்கியில் தந்திருக்கும் ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து சொல்லுங்கள். எல்லா வங்கியிலும் இதற்காக தனி இணைப்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக கார்டை முடக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
* பொதுவாக கார்டை ஸ்வைப் செய்து பணம் எடுக்கும் மெஷின்களைவிட, கார்டை உள்ளே இழுத்துக் கொண்டு, பணம் தந்துவிட்டு, அதன்பின் கார்டை வெளியே அனுப்பும் மெஷின்கள் பாதுகாப்பானவை. இதில் அந்நிய நபர்கள் மோசடி செய்ய முடியாது. ஆனால் சமயங்களில் இந்த மெஷினில் கார்டு சிக்கிக் கொண்டு, வெளியில் வராமல் போய்விடும். வங்கியில் புகார் எழுதிக் கொடுத்தால், ஓரிரு நாட்களில் பாதுகாப்பாக அதை மீட்டுத் தருவார்கள்.
* இயந்திரத்திலிருந்து பணம் வெளியில் வராமல், உங்கள் கணக்கில் மட்டும் கழிக்கப்பட்டிருந்தால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் உங்களுக்கு ஒரு அடையாள எண் தருவார்கள். தற்போதைய விதிமுறைகளின்படி, இப்படி தவறுதலாக பிடித்தம் செய்யப்பட்ட பணம், ஏழு வேலை நாட்களுக்குள் உங்கள் கணக்கில் மீண்டும் செலுத்தப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் நிவாரணத் தொகை உங்கள் கணக்கில் வங்கி செலுத்த வேண்டும்.